திருச்சி பீமநகர் ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி மீனாட்சி (வயது 85). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஒரு வாலிபர்,
தான் கலெக்டர் அலுவலகத்தில் நலவாரியத் துறையில் வேலை பார்ப்பதாகவும், உங்களுக்கு பென்ஷன் கிடைக்கும் என்று கூறி அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர், மீனாட்சியிடம் கழுத்தில் கிடக்கும் செயின் போட்டோவில் தெரிந்தால் பென்ஷன் கிடைக்காது, செயினை கழற்றி தாருங்கள், பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அந்த வாலிபர் கூறியபடியே, 4 பவுன் செயினை மூதாட்டி கழற்றிக் கொடுத்துள்ளார். பின்னர், மூதாட்டி யிடம் பேச்சு கொடுத்தபடியே வேறு ஒரு பொட்டலத்தை அவர் கையில் கொடுத்து விட்டு அந்த வாலிபர் நைசாக எழுந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். அதில், செயினுக்கு பதிலாக கற்கள் மட்டுமே இருந்தது. இதுகுறித்து பாலக்கரை போலீசில் மீனாட்சி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து கலெக்டர் அலுவலக ஊழியர் எனக் கூறி மூதாட்டியிடம் 4 பவுன் செயினை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.

Comments are closed.