கள்ளக்குறிச்சி விவகாரம்: கைது செய்யப்பட்ட 11 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி…!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது. கள்ளச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக, தேமுதிக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசு, சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 பேரில், 11 பேரை
5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஜூன் 28-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று (01-07-2024) விசாரணைக்கு வந்தது. கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பென்சிலால், கௌதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து இன்று முதல் புதன்கிழமை மாலை வரை போலீசார் விசாரிப்பதற்கு நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீஸார் தீவிர விசாரணைக்காக 11 பேரையும் அழைத்துச் சென்றனர்.
Comments are closed.