சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் கன மழை பெய்ததால் அந்த மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. தற்போது அந்த மாவட்டங்களில் நிலைமை சீரடைந்து வரும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தற்போது அங்கு மழை இல்லாததால் வெள்ளம் வடிந்து வருகிறது. மீட்பு பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தார். மேலும் இந்த ஆய்வில் 4 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர். இந்தநிலையில் தென் மாவட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். தூத்துக்குடி சென்ற அவர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். முதல் அமைச்சருடன் கனிமொழி எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.