Rock Fort Times
Online News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை… தி.மு.க.பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கிறார் ( படங்கள் )

திருச்சியில், டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நாளை(26-7-23) நடக்கிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவையையும் கேட்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 டெல்டா மாவட்டங்களில் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்காக அவர் நாளை காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர், அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு ஓய்வு எடுக்கிறார்.  பின்னர் அவர், மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு தங்குகிறார். பின்னர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி-கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்லும் முதல்-அமைச்சர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்து கார் மூலம் மீண்டும் திருச்சிக்கு வந்து இங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முன்னதாக, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இன்று காலை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன்,
மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்