பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது…!
பிரசித்தி பெற்ற பழனி கோயில் அடிவாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்திருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல் துறையினர், பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை முறைகேடாக வாங்கிய திருப்பூர் மாவட்டம், பாம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் துறைரீதியான விசாரணைக்குப் பிறகு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், நில மோசடி வழக்கு தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, உயர் நீதிமன்ற மதுரை கிளை, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தனக்கு நிரந்தர முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நேற்று (ஆகஸ்ட் 5, 2026) உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானல் மலைச்சாலையில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி கீழ் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த சிபிசிஐடி காவல் துறையினர் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான ஜெயபிரகாஷை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.