Rock Fort Times
Online News

த.வெ.க. அமைச்சர்களை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது ஏன்? எஸ்.பி.வேலுமணி விளக்கம்…!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று(06-08-2026) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தொடர் முடிந்த பிறகு அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையனை சென்னை தலைமைச்  செயலகத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி,“வாட்ஸ்அப்பில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுக எங்களுடைய கட்சி. எங்களை வளர்த்த கட்சி. சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அதிமுக ஆட்சிக் காலத்தில் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு பெரிய அளவில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் கோவை மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் தான் அமைச்சர்களைச் சந்தித்து பேசினோம். வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்