பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரி திருச்சியில் நடைபெறும் போராட்டத்திற்கு வந்து கொண்டு இருந்த விவசாயி உயிரிழப்பு…!
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு வந்த அமைச்சர்கள் வினோத், ரமேஷ் மற்றும் காந்திராஜ் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்போது இடைத்தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய அறிவிப்புகளை வெளியிட இயலாது எனக் கூறிய அமைச்சர் ரமேஷ், 20 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காகக் கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயி வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சொல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது
சக விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.