பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் அவருக்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. தான் தயாரித்து இயக்கி உள்ள எமர்ஜென்சி என்ற படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கால சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது. வருகிற செப்டம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் இப்படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுத, ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படம் ரிலீசாகும் நாள் நெருங்கும் சூழலில் கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்து சிலர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், சீக்கியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டினால் நீங்கள் (கங்கனா ரனாவத்) யாரை பற்றி படம் எடுக்கிறீர்களோ அவருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை நோக்கி நீட்டப்படும் கைவிரல்களை எப்படி உடைப்பது என்று தெரியும். ஏற்கனவே நீங்கள் அறை வாங்கி இருக்கிறீர்கள். எங்களின் தலைகளை தியாகம் செய்ய துணியும் எங்களுக்கு அதை எடுக்கவும் தெரியும் என்று மிரட்டலாக பேசி உள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கங்கனாவும் இதே வீடியோவை தமது எக்ஸ் வலை தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காவல்துறை, மகாராஷ்டிரா டி.ஜி.பி., பஞ்சாப் காவல்துறையை அவர் டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.