திருச்சி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட நியூ ராஜா காலனியில் வெள்ளி விழா ஆண்டு மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நடைபாதை மற்றும் குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் உள்ளன. இந்த பூங்காவிற்கு காலை, மாலை நேரங்களில் முதியவர்கள் நடைபயிற்சியும், சிறுவர், சிறுமிகள் விளையாடுவதும் வழக்கமாகும். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பூங்காவில் மாலை நேரத்தில் மின்விளக்கு எரியாத காரணத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், குழந்தைகள்
விளையாட போதிய வெளிச்சம் இல்லாததால் அச்சப்படுகின்றனர்.

மேலும், பூங்காவில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் சில மின் கம்பங்கள் துருப்பிடித்து பொதுமக்கள் தலையில் விழும் நிலையில் உள்ளது. அந்தப் பகுதி பிரமுகர்கள் இதனை கவனித்து துருப்பிடித்து கிடக்கும் மின் கம்பம் தலையில் விழாமல் இருக்க அங்குள்ள சுவற்றுடன் இணைத்து கட்டி வைத்துள்ளனர். சில மின்கம்பம் துருப்பிடித்து விழுந்து பூங்காவின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், பூங்காவின் அவல நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வருகை தருவதால் இந்த பூங்காவில் உள்ள பழுதுகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Comments are closed.