திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (40). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக ஜாதகம் பார்க்க பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை (45) சந்தித்தார். அப்போது அவரது மனைவி அஞ்சலையும்(40) உடன் இருந்தார்.
தம்பதியினர் தங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ள நிலையில், அவசரத் தேவையாக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் பணம் கொடுத்தால் ஓராண்டில் ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 4 லட்சமாக திருப்பிக் கொடுக்கிறோம் எனக் கூறினராம். இதை நம்பி ஜீவானந்தம் கொடுத்த ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட மணிகண்டன் – அஞ்சலை தம்பதி கூறியபடி பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம், ஜீவானந்தம் புகார் அளித்தார். இதேபோல, லால்குடியைச் சேர்ந்த அன்புமணி என்பவரிடம் ஜோதிடர் மணிகண்டன் ரூ. 7 லட்சம் வரை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார்களின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ஜோதிடர் மணிகண்டன் 5 பேரிடம் இதே பாணியில் ரூ.13 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், பெரம்பலூரில் பதுங்கியிருந்த மணிகண்டன், அவரது மனைவி அஞ்சலை ஆகிய இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed.