திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினருக்கு இரவு ஆந்திராவிலிருந்து பிராட்டியூர் அருகேயுள்ள ராம்ஜீநகருக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சி- திண்டுக்கல் சாலையில் புங்கனூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு லாரி அவ்வழியாக வந்துகொண்டிருந்தது. உடனடியாக அவ்வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநரான, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த மனோஜ்பிரபு (31) என்பவரையும் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த .பாலமுருகன் (34) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு லோடு ஏற்ற சென்று திரும்பியபோது, ஏற்கெனவே அறிமுகமான ராம்ஜீநகரைச் சேர்ந்த மு. பிரபாகரன் (30) கூறியதன்பேரில் விஜயவாடாவிலிருந்து ஒருவர் அளித்த கஞ்சாவை கொண்டு வந்ததாகவும், அவரிடம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மனோஜ்பிரபு, பாலமுருகன் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.