தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.ஆனால் இந்த முறை ஜூன் 4ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதாலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என பரவலான பேச்சு அடிபட்டது. ஆனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது மழை பெய்து வருகிறது.இதனால் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுமா அல்லது இரண்டாவது வாரத்தில் திறக்கப்படுமா என்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் இருந்தது. பள்ளிகள் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் இருந்த நிலையில், தற்போது வருகிற ஜூன் 6-ம் தேதி தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., 2024 – 25ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.