புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி பள்ளிக்கு ரூ.12 கோடியே 49 லட்சம் ஒதுக்கீடு…!
அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள எதுமலை சாலையில் கடந்த 1964ம் ஆண்டு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனையடுத்து
1989 ம் ஆண்டு இந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2018-19ம் ஆண்டு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. தற்போது 112 ஆசிரிய- ஆசிரியைகள், 3,566 மாணவிகளுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டதால் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட 2022- 23ம் ஆண்டுக்கான நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 49 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, புதிதாக 59 கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று (09-02-2024) நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ.கதிரவன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் முத்துச்செல்வன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.