தொடர்ந்து ஆதரவு அளிக்கும் யாதவர்களை புறக்கணிக்கும் அதிமுக- 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஒதுக்கினால் கூட்டணி…!
எடப்பாடி பழனிசாமிக்கு பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ்
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா மீது மட்டுமின்றி தங்கள் மீதும் யாதவ மக்கள் இன்றுவரை பெரும் மதிப்பு கொண்டிருக்கின்றனர்.
காரணம் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னையில் சிலை அமைத்தும் , கட்டாலங்குலத்தில் மணிமண்டபமும் கட்டியது மட்டுமின்றி மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்திவிழாவை தொடர்ந்து அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பித்து அவ்விழாவை சிறப்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடத்தி வந்ததால் அதிமுக மீது யாதவ மக்கள் மாறா அன்பு கொண்டுள்ளனர். இது மிகையல்ல. இதற்கிடையில் யாதவர்கள் நீதித்துறை ,நிர்வாகத்துறை காவல்துறை மற்றும் அரசியலில் மேம்பட வேண்டுமென்று 2011ம் ஆண்டில் துவக்கப்பட்ட பாரத முன்னேற்றக் கழகமும் அதிமுகவை ஆதரித்தது.
தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தொகுதி, பாராளுமன்ற தொகுதி மற்றும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவும் அதன் நிர்வாகிகளும், அதிமுகவுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்காக 5 அமைச்சர்களை வைத்து செயல்வீரர்கள் கூட்டத்தினை பாரத முன்னேற்றக் கழகம் நடத்தியதையும் தாங்கள் அறிவீர்கள். முக்கியமாக தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை மீண்டும் அரசு விழாவாக நடத்த அறிவித்த போது மீண்டும் மிகப்பெரிய நன்றி கடனுக்குள்ளானோம்.
மேலும், தமிழக மக்கள் நலனுக்காக நீங்கள் எடுத்த அனைத்து நல்ல விசயங்களுக்கும் ஆதரவாக இருந்தோம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகளும் சுயமாக வெளியேறி விட்டன. சின்ன கட்சியோ, பெரிய கட்சியோ அவைகளுக்கு ஓட்டு வங்கி இருக்கிறதோ, இல்லையோ அத்தனை கட்சிகளையும் பாரதிய ஜனதாவினர் தமது அணியில் இணைத்து பிரதமர் மோடியோடு கரம் கோர்க்க வைத்து விட்டார்கள். இதற்கு பலன் இருக்குமா என்பது பின்னர்தான் வெட்ட வெளிச்சமாகும். எவர் போனாலும் கவலையில்லை என தேர்தலை தனித்தே களம் காணக்கூடிய மாபெரும் வாக்கு வங்கியை கொண்ட அதிமுகவின் வலிமைமிக்க பொதுச்செயலாளரான தங்களின் நெஞ்சுரத்தினை பாராட்டுகின்றோம். அதேநேரம் இன்றுவரை இம்மியளவும்
பிரதிபலன் பாராது அதிமுக கூடவே பயணிக்கும் யாதவர்களையும் அதன் அரசியல் கட்சியான பா.மு.க.வினையும் இதுவரை அதிமுக கண்டுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கூடிய சமுதாயமாக யாதவ சமுதாயம் வாக்குகள் உள்ளன என்பதனை தாங்கள் அறிந்தும் எங்களை புறக்கணித்திருப்பதால் நிச்சயமாக அதிமுகவுக்கு வாக்கு இழப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பாகி விடும். அதிமுகவில் உள்ள யாதவர்களில் ஒன்று, இரண்டு பேருக்கு சீட் கொடுத்தாலும் அது எங்கள் சமுதாயத்துக்கு பயன் தராது.
ஆகவே, யாதவர்களின் வாழ்வு உயர போராடுகின்ற பா.மு.க.வுக்கு நடைபெற இருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான உரிய கூட்டணி அங்கீகாரத்தினை முன்னரே அதிமுக கொடுத்திருந்திருக்கவேண்டும். ஆனால், கூட்டணியில் இருந்த, இருக்கின்ற , அரசியல் தலைவர்களின் விசுவாசம், சமுதாய பலம் ,அவர்களின் பிரச்சார வியூகம் போன்றவற்றினை அதிமுக கண்டறியாதது ஏன் என தற்போது வினா எழுகின்றது. இருப்பினும் எவ்வளது நாள்தான் நன்றிக்கடனுக்காக பாரத முன்னேற்றக் கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டே இருப்பது. பகட்டுக்கு ஆசைப்பட்டு ஒடிப்போகாத எங்களை உடனே கூட்டணியில் சேர்த்துக்கொள்ள அதிமுகவும் தாங்களும் முன் வரவேண்டும். அதோடு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்களின் அங்கீகாரத்துக்காக பாரத முன்னற்றக் கழகத்துக்கு 12 தொகுதிகளை ஒதுக்கி இப்போதே அதற்கான ஒப்பந்தத்தினையும் ஏற்படுத்தி அதிமுக வழங்க வேண்டும். அப்படி அதிமுக செய்தால் நிச்சயமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள் யாதவர்களுக்கு செய்த நன்மைகளை எம்மக்களிடம் எடுத்துரைத்துப்போம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில அதிமுக வாக்கு வங்கியிலிருந்து கூடுதலாக ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 50,000 யாதவ மக்களின் வாக்குகளை பெற்றுத் தருவோம்.
தங்கள் கரத்தினை வலுப்படுத்துவோம் என்ற உறுதியை தங்களுக்கு தருகின்றோம். இவ்வாறு அந்த கடிதத்தில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.