திருச்சி -அபுதாபி இடையே, ஆகஸ்ட் 11-ஆம் தேதியிலிருந்து கூடுதலாக 4 விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளது. இத்துடன் வார நாள்களில் மொத்தம் 7 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதால், வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி வழியாக அபுதாபிக்கு வாரம் ஒரு சேவை மட்டுமே வழங்கி வந்தது. பின்னர் நிர்வாகக் காரணங்களால் அந்தச் சேவையும் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், வார நாள்களில் செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 5.30-க்குப் புறப்பட்டு செல்லும் வகையில் ஒரே ஒரு விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் தொடங்கியது. அதன் பின்னர் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் என தற்போது வார நாள்களில் 3 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அபுதாபிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. திருச்சி மத்திய மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், விமானத்தில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், வேறு விமான நிலையங்களை நாடும் நிலை உள்ளது. உதாரணமாக, சென்னை, கோவை, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். மேலும் சிலர் திருச்சியிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானம் மூலமும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி -அபுதாபி இடையே வாரநாள்களில் 4 சேவைகளை இயக்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு அபுதாபியை சென்றடையும். அதேபோல எதிர் மார்க்கத்தில் அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் காலை 6.30-க்கு திருச்சியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துபாய்க்கு செல்லும் பயணிகள் அபுதாபியிலிருந்து சாலை மார்க்கமாகவும் செல்ல முடியும் என்பதால், துபாய் செல்லும் பயணிகளும் இந்த விமானத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
Comments are closed.