வழிப்பறி கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கிய இளம்பெண் ! குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார் விழுப்புரத்தில் பரபரப்பு
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 21). பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பவித்ராஸ்ரீ(வயது – 20). இவர் சென்னை மூலக்கடை பகுதியில் தங்கி, ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ரமேஷ், பவித்ராஸ்ரீ ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் கிரிவலத்திற்காக திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பத்தில் கடந்த 24-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்களது ஸ்கூட்டரை மறித்த மர்மநபர்கள், இருவரின் செல்போனையும் பறித்தனர். தொடர்ந்து பவித்ராஸ்ரீயை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். இதனால் அவர்களிடம் இருந்து பவித்ராஸ்ரீ தப்பித்து ஓடினார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பவித்ராஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். காதலன் ரமேஷ் அளித்த தகவலின் பேரில், 2 வாலிபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், மர்மநபர்கள் பறித்து சென்ற செல்போன்கள் ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரும் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தனக்கன்குளம் அடுத்த கோலியங்குளம் இந்திரா நகரை சேர்ந்த சந்திர பெருமாள் மகன் உதயபிரகாஷ் (24) என்பதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. சொந்த வேலை காரணமாக, சென்னை சென்றிருந்த இவர்கள், சம்பவம் நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, கோனேரிக்குப்பத்தில் வந்தபோது இவர்கள், ரமேசை வழிமறித்து தாக்கி, செல்போனை பறித்தனர். மேலும், அவருடன் வந்த பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை தாக்கி செல்போனை பறித்த அவர்கள், பின்னர் பவித்ராஸ்ரீயை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிய ஓடியபோது அந்த இளம்பெண் விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பறித்த செல்போன்கள் எங்கு உள்ளது? என்று போலீசார் கேட்ட போது, அதை விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஏரிக்கரையில் பதுக்கி வைத்து இருப்பதாக கூறினர். அங்கு உதயபிரகாஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர். அங்குள்ள புதரில் இருந்து செல்போன்களை எடுத்து கொடுத்த உதயபிரகாஷ், ஏற்கனவே அங்கு செல்போன்களுடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை வெட்டிவிட்டு, தப்பி ஓடினார்.இதையடுத்து தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர், உதயபிரகாஷின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த உதயபிரகாசை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கத்திவெட்டில் காயமடைந்த சப்- இன்ஸ்பெக்டர், மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.