திருச்சி தாராநல்லூர் எஸ்.வி.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் தனது நண்பர்கள் தினேஷ்குமார், சரத்குமார், சுதாகர் ஆகியோருடன் தஞ்சாவூர் சாலை பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது மேஜைக்கு அருகே 7 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மேஜையில் இருந்து ஒரு பாட்டில் கீழே விழுந்தது. உடனே கார்த்திக் திரும்பிப் பார்த்தார்.
இதுதொடர்பாக கார்த்திக்கும், 7 பேர் கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் கார்த்திக்குக்கு தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தனியார் பாரில் தகராறு செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.