Rock Fort Times
Online News

திருச்சியில் நடைபெறும் சிலம்பப் போட்டிக்கு வந்த மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி- அதிகாரியுடன் பெற்றோர்கள் வாக்குவாதம்…!( வீடியோ இணைப்பு)

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த 10ம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது.  தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, சிலம்ப போட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று(12-09-2024)  12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான சிலம்பப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில், பங்கேற்பதற்காக மாணவிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர்.  முன்பதிவில் வயது வரம்பு மட்டுமே கேட்கப்பட்டு இருந்ததாகவும்,  வேறு எந்த விதிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  இந்தநிலையில் போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவிகளிடம் போட்டி நடத்துபவர்கள் 40 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும், அந்த எடை இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என திடீரென கூறியதால் போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும், மாணவிகளை அழைத்து வந்தவர்களுக்கும், போட்டியை நடத்துபவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இந்த பிரச்சனை நீண்ட நேரமாக சென்று கொண்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட விளையாட்டு அதிகாரி மற்றும் கேகே நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த அனைவரையும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள்  போட்டியில் பங்கேற்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில்,  தங்களுடைய பிள்ளைகள் தொடர்ந்து பயிற்சி எடுத்து இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வருகின்றனர். அரசு சார்பில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் விதிக்கப்படும் திடீர் நிபந்தனைகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பங்கேற்க வந்த பல மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என நினைத்து கவலையோடு முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டனர். வரும் காலங்களில் இதுபோன்ற எந்த வித குளறுபடிகளும் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்