Rock Fort Times
Online News

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தை அறுத்து தற்கொலை…!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை, பெரியநாயகி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (65). ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மதுப்பழக்கத்துக்கு உள்ளாகி, அடிக்கடி மது அருந்தி விட்டு கண்ட இடங்களில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மகன்கள், தந்தையை கண்டித்ததுடன் இனியும் மது அருந்தினால், மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுவோம் என கூறினராம். அவரது இரு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த மகன் பாலக்கரை பகுதியில் ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டு தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். மெக்கானிக்கான இளைய மகன் குடும்பத்தினருடன் புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகன் வேலைக்கு சென்று விடவே, வீட்டில் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்துள்ளனர். மகன்கள் கண்டித்ததால் கடந்த ஒரு மாதமாக மது அருந்தாமல் இருந்த புருஷோத்தமன் மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில் வெளியே சென்றிருந்த மருமகள் மீண்டும் வீடு வந்து பார்த்தபோது புருஷோத்தமன் கழுத்து அறுபட்ட நிலையில் கையில் கத்தியுடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர், சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொண்டதில், வீட்டிலிருந்து சற்று தூரம் ஓடிய பின்னர் நாய் யாரையும் பிடிக்காமல் படுத்து கொண்டது. இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்