“ஐ.டி. ஆபிஸர்ஸ்” என்று கூறி தொழில் அதிபர்களிடம் நகை, பணம் பறித்த கும்பல் மணப்பாறையில் சிக்கியது- தனிப்படை டீமுக்கு எஸ்.பி.பாராட்டு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (44). இவர், வீரப்பூரில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி சுதாகரும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் கடையில் இருந்தனர். அப்போது போலி பதிவெண் கொண்ட மற்றும் தமிழக அரசு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட காரில் வந்த 5 பேர், தாங்கள் வருமானவரித்துறை, சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி மருந்து கடையில் சோதனையிட்டனர். மேலும், நீங்கள் மக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. எங்களுடன் விசாரணைக்கு வாருங்கள் எனக் கூறி சுதாகாரை காரில் அழைத்துச் சென்றனர். பின்னர், சுதாகர் மனைவிக்கு போன் செய்து, உனது கணவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 லட்சம் தரும்படி கூறினர். பின்னர் பேரம் பேசி ரூ.10 லட்சம் தரும்படி கூறினர். அவர்களது பேச்சு, நடத்தையில் சந்தேகமடைந்த அவர், திருச்சி மாவட்ட எஸ்பி உதவி எண் 94874 64651 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், மணப்பாறை டிஎஸ்பி மரியமுத்து மேற்பார்வையில், ஆய்வாளர்கள் மணப்பாறை குணசேகரன், ராம்ஜிநகர் வீரமணி, துறையூர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், மஞ்சம்பட்டி அருகே முறுக்குக் கடை ஒன்றில் அவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்றனர்.
அவர்களை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரள மாநிலம் நெடுமங்காடு நவுஷாத் (45), திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வைரி செட்டிபாளையத்தைச் சேர்ந்த சேகர் (42), வளையப்பட்டியை சேர்ந்த சுதாகர் (44), மதுரை மாவட்டம் கோசாகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து (53), சென்னை ஆவடியை சேர்ந்த வினோத் கங்காதரன் (37) என்பது தெரிய வந்தது. மேலும், சுதாகாரை கடத்த உடந்தையாக இருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆளிப்பட்டி, தொப்பம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (37) என்பவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சுகாதாரத்துறை, வருமானவரித்துறையினர் எனக்கூறி பல இடங்களில் தொழில் அதிபர்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதேபோல அண்மையில் துறையூரில் சவுடாம்பிகை அம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வருவதாக கூறி அங்கிருந்த வரிடம் ரூ.5.18 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரியவந்தது.மேலும் துறையூர் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த தொப்பம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (32), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூரைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம், 5 பவுன் நகைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 2 இருச்சக்கர வாகனங்கள், 8 செல்போன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். பிடிபட்ட 8 பேர் மீது மணப்பாறை, துறையூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மருந்து கடை உரிமையாளரை கடத்திய சில மணி நேரத்திலேயே துரிதமாக செயல்பட்டு சுதாகாரை மீட்டு, கடத்தல் கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி வருண்குமார் வெகுவாக பாராட்டினார்.
Comments are closed.