திருச்சியில் போலீசாரின் வாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய புகையிலை பொருட்கள்…!
தமிழகத்தில் ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் விற்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் மறைமுகமாக கடத்தப்பட்டு சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதனை காவல்துறையினர் ஆய்வு செய்து புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகர போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில், அரியமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஜேக்கப் தலைமையில் முதல்நிலை காவலர் காளிமுத்து, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தினேஷ், ராஜேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் எஸ்ஐடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, காருக்குள் 14 பெரிய மூட்டைகளும், 8 சிறிய மூட்டைகளும்,
4 மிகச்சிறிய மூட்டைகளும் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், விமல் உள்ளிட்ட சுமார் 240 கிலோ இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். இதனையடுத்து அவற்றையும், அதனை கடத்தி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் அன்புச்செல்வன் வழக்குப் பதிந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஏழூர்பட்டியை சேர்ந்த செல்வகுமார் ( 26), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (39)ஆகிய இருவரை கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வாகன தணிக்கையில் புகையிலைப் பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்த ரோந்துப்பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஜேக்கப், முதல்நிலை காவலர் காளிமுத்து, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தினேஷ், ராஜேஷ் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.
Comments are closed.