திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்) ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அதில், திருச்சி வேளாண் கண்காட்சியில் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் எனவும், அனைத்து வேளாண் இயந்திரங்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், விவசாயிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்களும் நடைபெறவுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.