தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் அதிமுகவை ஆதரிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜும் இதில் கையெழுத்திட்டு எனது செயலாளர் மூலம் அனுப்பியுள்ளார்.தொலைக்காட்சியில் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அங்கு வேறொரு கடிதம் காட்டப்பட்டது. அது போலிக் கடிதமாக இருக்கலாம். அல்லது குதிரை பேரமாக இருக்கலாம். நான் எனது எம்.எல்.ஏ-வை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் கட்சி விஜய்யை ஆதரிப்பதாகத் தொலைக்காட்சியில் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே, ஆளுநரிடம் அனுமதி பெற்று இந்தக் கடிதத்தைச் சமர்ப்பித்தேன், இது குறித்து விசாரிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். இது போலியானது அல்லது குதிரை பேரம் என்று நான் கருதுகிறேன். ஆளுநர் இதை அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கூறுகையில், ”நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். டிவிகேவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்து அல்ல. தவெகவிற்கு பெரும்பான்மையே இல்லை. எப்படி அவர்கள் ஆட்சி அமைக்க முடியும். தவெகவிற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை” என்றார். இந்நிலையில் ‘அ.ம.மு.க எம்எல்ஏ காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் இது நடந்தது. ‘கடிதம் எழுதவில்லை’ என்பது முழுப் பொய்.தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை’ என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Comments are closed.