திருச்சியில் நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்.எம்பி- த.வெ க. எம்எல்ஏ வாக்குவாதம்… அமைச்சர் முன்னிலையிலேயே ‘அக்கப்போர்’..! (வீடியோ இணைப்பு)
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் இன்று(05-10-2026) நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக குத்து விளக்கு ஏற்றப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ், காங்கிரஸ் எம்பி
கிறிஸ்டோபர் திலக்கிடம் மெழுகு திரியை கொடுத்து ஏற்ற கூறினார். அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, மற்ற எம்எல்ஏக்கள் விளக்கு ஏற்றி விட்டார்கள். நானும் த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் தானே … என்னை அழைக்காமல் காங்கிரஸ் எம்.பி.-ஐ அழைத்தது ஏன் என கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரை அமைச்சர் ரமேஷ் சமரசம் செய்தார். அதனைத் தொடர்ந்து நவல்பட்டு விஜி குத்துவிளக்கேற்றினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டிலேயே திருச்சி மாவட்டம்தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் மூலம் அதிகளவில் பயனடைந்துள்ளது. இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அதிகமானோர் பயன்பெறுவதற்கு தொடர்ந்து உழைத்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.

Comments are closed.