Rock Fort Times
Online News

ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்: அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்கு திமுக கடிதம்…!

5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக தெரிவித்தது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி, தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற தலைவர் பதவியை பெறுவதற்கு ஒருவர் ரூ. 5 கோடியை கொடுக்க முன்வந்ததாகவும், அவரை தன்னிடம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் லயோலா மணி அழைத்து வந்ததாகவும் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் சட்டத் துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பரந்தாமன், நவம்பர் 2-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக, லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988-ன் படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி, தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும் பரந்தாமன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அதில், ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம், அந்த முன்மொழிவின் துல்லியமான தன்மை, பரிமாறப்பட்ட தகவல்கள், இடைத்தரகரின் பங்கு மற்றும் வேறு எந்த நபர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நேர்மையான, சுதந்திரமான மற்றும் விரிவான புலனாய்வு மூலமாக மட்டுமே நிறுவ முடியும். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தகுந்த புலனாய்வு நடத்துமாறு கோரி, எழுத்துப்பூர்வப் புகாரை சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் நான் சமர்ப்பித்தேன். இருப்பினும், எனக்குத் தெரிந்த வரையில், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் புகார் மீது எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபர், தமிழ்நாடு அரசில் பதவி வகிக்கும் அமைச்சராக உள்ளார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதும், இதில் தொடர்புடையதாகக் கண்டறியப்படக் கூடிய பிற நபர்கள் மீதும் தகுந்த விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்கு, சட்டப்படி தேவைப்படக்கூடிய வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் முன் அனுமதியை பரிசீலித்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்