Rock Fort Times
Online News

அலுவலகக் கணினிகளில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘அட்வைஸ்’…!

அலுவலகக் கணினிகளில் வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்துவோர் ஒவ்வொரு முறையும் கணக்கிலிருந்து முறையாக வெளியேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் பாதுகாப்பு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. பலரும் அலுவலகக் கணினிகளில் வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்திய பிறகு கணக்கிலிருந்து வெளியேறாமல் பிரவுசரை மட்டும் மூடிவிட்டுச் செல்கின்றனர். இதனால், அதே கணினியைப் பயன்படுத்தும் மூன்றாம் நபர்கள் அவர்களது அனுமதியின்றி வாட்ஸ்-அப் கணக்கை அணுகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊழியர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், தொடர்பு எண்கள், அலுவலகக் குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் உள்ளிட்டவை மூன்றாம் நபர்களின் கைகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரகசியத் தகவல்களைக் கையாளும் அலுவலகங்கள் வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அலுவலகப் பணிகள், அரசு சார்ந்த தகவல்கள், நிதி விவரங்கள் மற்றும் முக்கியமான ரகசியத் தகவல்களை வாட்ஸ்-அப் வெப் வாயிலாகப் பரிமாறக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நம்பகமான கணினிகளில் மட்டும் Incognito அல்லது Private Browsing வசதியைப் பயன்படுத்தலாம் என்றும், இணைய மையங்கள், ஹோட்டல்கள், பொது இடங்கள் மற்றும் பிறருக்குச் சொந்தமான கணினிகளில் வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்-அப் வெப் பயன்படுத்தி முடித்ததும் முறையாக Logout செய்வதுடன், இணைக்கப்பட்டுள்ள சாதனங்களையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய கவனக்குறைவு கூட தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அலுவலக ரகசியங்கள் கசிவதற்கு வழிவகுக்கும் என்பதால், கணினி மூலம் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்