Rock Fort Times
Online News

திருச்சி, பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி கண்களில் துணியை கட்டிக்கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்…!

திருச்சி மாவட்டம், முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீர் விவசாய தேவைகளுக்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால், கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் பிரித்து அனுப்பப்படும். அந்தவகையில் கடந்த செப்டம்பர் 1- ம் தேதி மேட்டூரில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட போதிலும் போதுமான அளவு தண்ணீர் கடைமடை வரை சென்று சேராததால் சம்பாவும் பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி முக்கொம்புலிருந்து பெருவளை வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் லால்குடி அருகே இருக்கக்கூடிய பள்ளி விடை கிராமம் வரை மட்டுமே வருவதாகவும் அதற்கு மேல் தண்ணீர் வருவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெருவளை வாய்க்காலை நம்பி இருக்கக்கூடிய பெருவளப்பூர், நெய்குப்பை, புதூர், உத்தமனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 50 நாட்களுக்கு முன்பு பயிரிட்ட நிலையில் ஆரம்பத்தில் ஓரளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தற்போது தண்ணீர் திறந்து விடப்படாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து 15 நாட்களாவது தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் பெருவளை வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு
நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்