Rock Fort Times
Online News

புதிய தலைமை செயலகம் எங்கே கட்ட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது…- உயர் நீதிமன்றம்..!

சென்னை, பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வெளியிட்டார். அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதாக தற்போதைய தவெக தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, புதிய கட்டடம் கட்டுவதற்கு 1,200 கோடி செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகை செலவாகாது. மக்களின் வரிப்பணமும் சேமிக்கப்படும்.
எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடும்படி உத்தரவிட வேண்டும் என
கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எந்த இடத்தில் கட்டடம் கட்ட வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. வழக்குக்கான முக்கிய காரணங்களை கூட மனுவில் தெரிவிக்கவில்லை என்றால் எப்படி நீதிமன்றம் வழக்கை பரிசீலனை செய்ய முடியும்?. ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட ஒரு வழக்கை அபராதத்துடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசின் கொள்கை ரீதியான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. அதனால், கடுமையான அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப் போகிறோம்” என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததால், அபராதம் ஏதும் விதிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்