Rock Fort Times
Online News

நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் விவகாரம்… 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டிப் பலகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டி பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து ஹிந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தன. இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மாநில அரசே ஹிந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதற்கு யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வைத்த வழிகாட்டி பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்