திருப்பரங்குன்றம்: ‘சர்வே’ கல் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்…* உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர்..!
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 24-ந் தேதி மட்டும் சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (நவம்பர் 25) முதல்கட்ட நிலவர அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவு மீது மிக உயர்ந்த மரியாதை கொண்டுள்ளேன். உச்சநீதிமன்ற உத்தரவை திட்டமிட்டு மீறிய செயல் நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய உறுதி பூண்டுள்ளேன். தீபத்தூணில் விளக்கு ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்தது. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில், கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு தீபக்கூட்டத்தில் விளக்கேற்ற அனுமதி அளிக்கவில்லை. அதனால் அங்கு தீபம் ஏற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Comments are closed.