வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்…!
காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று(25-11-2026)
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏர் பூட்டிய இரண்டு காளை மாடுகளுடன் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் கைகளில் பனை ஓலைகளை ஏந்தியபடி, பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நிதிச்சுமையைக் காரணம் காட்டித் தட்டிக்கழிக்கக் கூடாது. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மற்றும் ஊதிய உயர்வு வழங்கும் அரசு, விவசாயிகளை மட்டும் வீதியில் இறங்கிப் போராட வைப்பது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 லட்சம் விவசாயக் குடும்பங்களை ஏமாற்றாமல், அரசு அளித்த வாக்குறுதியின்படி கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார்.


Comments are closed.