‘விஸ்வரூபம்’ எடுக்கும் ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கு: த.வெ.க.-திமுக- கம்யூனிஸ்ட் கட்சிகள் வார்த்தை மோதல்..!
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி (வயது 84). பிரபல தொழில் அதிபரான இவர் பல சிறுமிகளை சீரழித்ததாக புகார் எழுந்துள்ளது . இதுதொடர்பாக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுமிகளை சப்ளை செய்ததாக சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த பாலியல் வழக்கை துரிதமாக விசாரிக்குமாறு சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திமுக மறுப்பு:
இந்த நிலையில் திமுக ஆட்சி காலத்தின் போது இந்த வழக்கை நீர்த்துப் போக செய்ததாகவும், பெருமளவில் பணம் கைமாறி உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு திமுக எம்.பி.இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது. 2025 நவம்பர் 7-ல் திமுக ஆட்சியில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு சோதனையிடப்பட்டு அப்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் புலன் விசாரணை செய்யப்பட்டது. ‘வழக்கை கைவிடவில்லை, உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி:
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சர்
ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஜெயலலிதா ஆட்சியின் போதும் இதே போன்ற பாலியல் வழக்கில் இருந்து வீரமணி தப்பித்துள்ளதாகக் சுட்டிக்காட்டிய அவர், அப்போது காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்த முன்னாள் ஆளுங்கட்சியினர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோதும் வீரமணி தப்பித்துள்ளார் என்றும், அவரைத் தப்பிக்க வைத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், இவ்விகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசார் விசாரணை மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் வார்த்தை மோதல் காரணமாக இந்த வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Comments are closed.