சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் மனு அளித்துள்ளார். அதில், ஒரே இல்லத்தில் வசித்த போது தனது 5 செக்குகளை நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. நடிகை ராதா, சென்னை, போரூரில் பி.ஆர்.கார்டன்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசரக் கட்டணங்களுக்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கமாம். கடந்த 2025 ம் ஆண்டு பி.ஆர்.கார்டன்ஸ் என பெயர் மாற்றப்பட்டதால், ஐ.டி.பி.ஐ வங்கியிலிருந்து புதிய செக் புக் வழங்கப்பட்டு பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ந் தேதி ஐ.டி.பி.ஐ வங்கியிலிருந்து ராதாவுக்கு வந்த மின்னஞ்சலில், பயன்பாட்டில் இல்லாத அவரது பழைய 5 காசோலைகள், அக்கா அம்பிகா நாயர் பெயரில் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட 5 செக்குகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.46 கோடி ஆகும். உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த செக்குகளுக்கான பண பரிவர்த்தனையை ராதா நிறுத்தியுள்ளார். இருதொடர்பாக
வங்கியில் விசாரித்த போது, அந்த பழைய காசோலைகளில் தொகையையும், பெயரையும் நிரப்பியது ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஃபெமா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார் அளித்துள்ளது, சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

Comments are closed.