முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு அப்படி சென்றார், இப்படி சென்றார் என்றெல்லாம் சொல்கின்றனர். அதனைப் பற்றி பேசவே விரும்பவில்லை. ஏனெனில், அவர் லண்டனுக்கே போக வேண்டாம் என கூற விரும்புகிறேன்.
பிரிட்டனின் வளர்ச்சியே வெறும் ஒரு சதவிகிதம்தான். அவர்களை முதலீடு செய்யச் சொன்னால், அவர்கள் எங்கு செல்வார்கள். அவர்கள் ஊரில் முதலீடு செய்வதற்கே அவர்களிடம் பணமில்லை. இந்தியாவிலிருந்து டாடா, ஜாகுவார், மகிந்திரா ஆகியோர்தான் பிரிட்டனில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
என்று வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னை, தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்,
“அண்ணாமலையை முதிர்ந்த அரசியல்வாதி என நினைத்தேன். அவர் பாஜகவில் 8 ஆண்டுகளாக இருந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அவரிடம் இருந்து இதுபோல் அறிவிப்பு வருவது நல்லதல்ல என நினைக்கிறேன். முதலீடுகளுக்காக பெரிய போர் நடைபெற்று வருகிறது. ஒரு ரூபாய் வந்தாலும் அது தமிழ்நாட்டுக்கான முதலீடுதானே.. முதலீடுகளுக்காக முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல என நான் நினைக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வெளிப்படையான, தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகின்றனர். கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை குறைத்து வருகிறோம். தமிழக அரசு பெறும் கடன் குறைந்து வருகிறது. தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.