ஹிந்தி திணிப்பு மட்டும் தான் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமா?* தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட
வழக்கு இன்று (17-09-2026) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தனது வாதங்களை முன்வைத்தார். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்க உத்தரவு பிறப்பிக்க கூடாது. தமிழகத்தில் போதுமான அரசு பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் ஹிந்தி பயில எந்த தடையும் இல்லை; ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கல்விக் கொள்கை இருக்கிறது, நவோதயா பள்ளி மாநில கல்வி கொள்கைக்கு எதிரானது. இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் நாடு. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி கொள்கைகள் உண்டு. இது நிலைப்பாடு சார்ந்த பிரச்சனை அல்ல.மாறாக அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். ஹிந்தி திணிப்பு மட்டும் காரணம் அல்ல, நிதி சார்ந்த பிரச்னைகளும் உள்ளன. மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல தர வேண்டியிருக்கிறது, என்றார். பின்னர் நீதிபதிகள் கூறுகையில், நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுப்பதா?. அந்த மனநிலையை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்தின் மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது. நவோதயா பள்ளிகள் அமைக்கும் திட்டம் மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது அல்ல. மொழி கொள்கை தொடர்பாகத் தயவுசெய்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான நிலங்களை கண்டறிய மேலும் 3 மாத காலம் அவகாசம் தருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களைக் கண்டறிய வேண்டும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும். அரசு மாறியிருப்பதால், மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பு விடாப்பிடியாக இருக்கிறது. ஹிந்தி திணிப்பு மட்டும் தான் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமா? நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அரசு மத்திய அரசுடன் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Comments are closed.