பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக பதவி வகித்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ஜூன் 5 ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ‘வி த லீடர்ஸ்’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். முதலில் இயக்கமாக தொடங்கி. விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். அவரது அமைப்பில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், ‘வி த லீடர்ஸ்’ அமைப்புக்கு பாஜக முன்னாள் நிர்வாகி கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு நாகராஜன், ‘ வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நமது அமைப்பின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு. மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நிர்வாகிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கரு. நாகராஜன் முன்னெடுத்துச் செல்வார். அவரது அரசியல் அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், நமது ‘வி த லீடர்ஸ்’ அமைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்கள் மத்தியில் நமது அமைப்பின் செயல்பாடுகளை விரிவாகக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.