Rock Fort Times
Online News

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: த.வெ.க. பெண் வழக்கறிஞர் அதிரடியாக நீக்கம்…!

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தற்காலிக அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நியமனங்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் சிலர் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, த.வெ.க. வழக்கறிஞரணி இணைச் செயலாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.ஞானசவுந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் ஆகியோரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நடக்கிறது. இதில் முதல்வர், அமைச்சர் பெயர்களை தேவையில்லாமல் சேர்த்துள்ளனர்” என்று வாதிட்டார். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, விளம்பர நோக்கத்திற்காகவே முதல்வர் மற்றும் அமைச்சரின் பெயர்களை இந்த வழக்கில் மனுதாரர் சேர்த்துள்ளார். இந்த நியமனத்தில் திமுக, அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரே கூறியுள்ளார். இதிலிருந்தே இந்த நியமனங்கள் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கிறது என்பது தெளிவாகிறது
என்று கூறினார். இதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சரின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க மனுதாரர் சம்மதித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ஞானசவுந்தரி அதிரடி நீக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஞானசவுந்தரி மீது த.வெ.க. ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் மூலம் கட்சியில் இணைந்த ஞானசவுந்தரி, எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, கட்சியின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுக்கு முரணாகச் செயல்பட்டுள்ளார். எனவே, அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இனி அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்