Rock Fort Times
Online News

தமிழகத்தில் 3 நாட்களில் 844 ரவுடிகளை தட்டி தூக்கிய காவல்துறை…!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுமக்களின் நலன்கருதி அமைதியான, பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டுமென்ற முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க ரௌடிகளின் நடவடிக்கைகள், போதை மருந்துப் பொருட்கள் பயன்பாட்டினை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று காவல் துறை உறுதி பூண்டுள்ளது. குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகின்ற குழுக்களின் நடவடிக்கைகளைக் குலைத்தல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு திறம்பட பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக அதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக. 15,349 ரௌடிகள் (12,650-வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் மற்றும் 2.699-வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாக. 3.246 ரௌடிகள் (வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் -2.468 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள் -778) காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருவதுடன் அவர்களில் 844 (வரலாற்றுப் பதிவேடு ரௌடிகள் -488 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள் -356) பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிச்சந்தையில் ரூ. ஒரு கோடியே 43 லட்சம் மதிப்புடைய 267.756 கிலோகிராம் எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்