திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு டிசி வழங்க ரூ.300 லஞ்சம் பெறப்பட்டதா? வைரலாகும் வீடியோ…!
அண்மையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 300 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களும் வேறு வழி இன்றி அந்த தொகையை கொடுத்து சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர். இதனை யாரோ ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால், தற்போது அரசு
பள்ளியிலேயே மாணவர்களிடம் லஞ்சம் பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தாலும் அதனையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

Comments are closed.