திருச்சி, பெரியசெட்டி தெரு பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உதய் என்பவர் பாலாஜி டெஸ்டிங் என்ற பெயரில் தங்க நகைகளை பரிசோதித்து, உருக்கி அதனை மீண்டும் ஆபரணங்களாக செய்து விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். பெரிய செட்டிதெரு பகுதியில் இரண்டாவது மாடியில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இவரது மனைவி மகாராஷ்டிரா சென்றிருந்த நிலையில், திடீரென்று இவரது வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் உதயை கீழேதள்ளி வாயில் பிளாஸ்டர் ஒட்டி அவரை கழிவறைக்குள் வைத்து பூட்டி விட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது உதயிடம் பணிசெய்யும் சிறுவன் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததும், தனது முதலாளி கழிவறையில் கிடந்ததையும் பார்த்து அவரைக் காப்பாற்றினான். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மலைக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.