ஆம்லெட்டில் உப்பு குறைவாக இருந்ததால் ஹோட்டலில் தகராறு: சண்டையை விலக்கி விட சென்றவர் அடித்துக் கொலை…!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், வல்லவாரி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). அதே ஊரில் உள்ள கடைவீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு மஞ்சக்கரையை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு மது குடித்துவிட்டு போதையில் சாப்பிட வந்த அதே பகுதியில் உள்ள பேக்கரி மாஸ்டர் ஜான் (எ) கிறிஸ்டோபர் ஆம்லெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதில் உப்பு குறைவாக இருந்ததால் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் பரோட்டா மாஸ்டரும், கடை முதலாளியும் ஜானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த ஜான், 2 நாட்களாக வீட்டிற்கும் செல்லாமல், வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து தனது தம்பி டேவிட்க்கு போன் செய்து ஹோட்டலில் தன்னை தாக்கி விட்டதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு, ஜான் தனது தம்பி மற்றும் சிலருடன் அதே ஹோட்டலுக்குச் சென்று ஆம்லெட் மற்றும் கொத்துப் பரோட்டா கேட்டுவிட்டு அமர்ந்திருந்தனர். பரோட்டா மாஸ்டர் சுரேஷ் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்த போது அவரது தலையில் பீர் பாட்டிலால் தாக்கியதுடன், ஜானின் உறவினரான பட்டுக்கோட்டை விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் அஜித்குமார், ஜான் மில்டன், கார்த்திக், அஜித் உட்பட 8 பேர் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் சுரேஷ், கடை முதலாளி ஞானசேகரன் ஆகியோரை அடித்து உதைத்து பலமாக தாக்கி கடையையும் சேதப்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆயிங்குடி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் டிரைவரான பிரபு (24) சண்டையை விலக்கி விட்ட போது மது போதையில் இருந்த ஜானுடன் வந்திருந்தவர்கள் பிரபுவையும் சரமாரியாக தாக்கி கீழே தள்ளி முகம் மற்றும் நெஞ்சில் கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அக்கம்பக்கத்தினர் காயமடைந்து கிடந்த பிரபு மற்றும் ஞானசேகரன், சுரேஷ் ஆகியோரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரபு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மற்ற இருவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சண்டையை விலக்கி விடச் சென்ற பிரபுவை தாக்கிக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பிரபு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டுக்கோட்டையில் பதுங்கி இருந்த 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.