டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் விமான நிலையத்திற்குச் சனிக்கிழமை வந்தபோது, பிரான்ஸ் காவல்துறையால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாக, பாவெல் துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குற்றவியல் நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிக்காமல் விட்டதன் காரணமாகவே, தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. பாவெல் துரோவ் டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெலிகிராம் செயலியை அதிகம் பயன்படுத்தும் பயனர்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்களுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் 39 வயதான பாவெல் துரோவ், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகள் டெலிகிராம் செயலி மூலம் பகிரப்படுவதற்கு ஆதரவாக இருந்ததாக, பிரான்ஸ் அரசால் குற்றம்சுமத்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு அரசு பிறப்பித்த கைது வாரன்ட்டின் பேரிலேயே, தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.