திருச்சி காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராமச்சந்திரனுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு…!
திருச்சி காவல் பயிற்சிப் பள்ளி முதல்வராகவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருபவர் கு.ராமச்சந்திரன். இவர் இதற்கு முன்னர் சென்னையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிலும், விருதுநகரில் அயல் பணியிலும் சிறப்பாக பணியாற்றினார். இதேபிரிவில் சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம்- ஒழுங்கு பிரிவிலும் காவல் உதவி ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 2026ம் ஆண்டிற்குரிய தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் (ஜனாதிபதி) பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கு.ராமச்சந்திரன். கல்லூரி முதுகலை படிப்பை முடித்த இவர், 01-03-1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்தார். அப்போது கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழித்தும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமலும் சிறப்பாக பணிபுரிந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் வெகுமதியையும், பாராட்டையும் பெற்றுள்ளார். மொத்தம் 47 அரசு அலுவலர்கள் மீது லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, அவர்களை பொறி வைத்து பிடித்து கைது செய்துள்ளார். இவர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது முறையாக கணக்கு காண்பிக்கப்படாத 48 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவர் 1996-1997ம் ஆண்டில் பயிற்சியின்போது தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும், இவரது மேற்கண்ட மெச்சத்தகுந்த பணிகளை பாராட்டி, இவருக்கு உயர் அதிகாரிகளால் 80 வெகுமதிகள், 40க்கும் மேற்பட்ட நற்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2009-ல் தமிழக முதல்வர் (அண்ணா பதக்கம்) பதக்கமும், 2012-ல் தமிழக ஆளுநரின் விஜிலென்ஸ் தங்கப்பதக்கமும், 2018-ல் மெச்சத்தகுந்த பணிக்காக குடியரசு தலைவர் பதக்கமும், 2019-ல் (அத்திவரதர் பாதுகாப்பு பணி) தமிழக முதல்வர் பதக்கமும், 2019-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உத்கிரிஸ்ட் சேவா பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டு உயர் அதிகாரிகளின் நன் மதிப்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும், அவரது சிறப்பான பணிக்கு மணிமகுடம்
சூட்டும் வகையில் தற்போது 2026ம் ஆண்டிற்குரிய தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.