இந்திய திரு நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை (ஆகஸ்ட் 15) சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கொடியேற்றும் முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும். காலை 8.45 மணிக்கு முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். கொடியேற்றத்திற்கு முன்னதாக, காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். கொடியேற்றத்தை தொடர்ந்து, நாட்டு மக்களுக்குத் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார். விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது மற்றும் நல் ஆளுமை விருதுகளை முதல்வர் விஜய் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களும் சென்னையில் ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை உள்ளிட்ட கோட்டையைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர்.

Comments are closed.