நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. அன்று முதல் நாள்தோறும் அங்கு மழை பெய்து வருகிறது. எனினும், ஒரு சில மணி நேரம் மட்டுமே பெய்வதால் சுற்றுலா பயணிகள் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதலே ஊட்டியில் கன மழை பெய்தது. இதனால், பூங்காவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மரங்களின் அடியிலும், புல் மைதானத்திற்குள் இருந்தவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குள்ளும் தஞ்சமடைந்தனர். மேலும், பூங்காவை விட்டு ஒரே சமயத்தில் மக்கள் வெளியேறியதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மழை காரணமாக பாதுகாப்பு கருதி சில மணி நேரம் ஊட்டி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதேபோல, மழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், 80 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி அளவுக்கு உயர்ந்து 84.75 அடியானது. இதனிடையே கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறாங்கற்கள் சரிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மலை ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், மலை ரயிலில் ஊட்டி செல்ல உற்சாகத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை வருகிற 20ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.