கேரள மாநிலம், தலப்பள்ளி வட்டம், குன்னத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்த உஸ்மான் மகன் அஸ்கர் (32). இவருக்குச் சொந்தமான கார் கடந்த 3 மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்தக் காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி முடக்கப்பட்டிருந்த நிலையில், செயல்பட்டதால் சந்தேகமடைந்த அஸ்கர், காரின் செயல்பாடுகளை கண்காணித்தார். இதனிடையே காணாமல் போன கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியை கடந்து செல்வதாகவும், அந்த காரை பிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போலீஸாரிடம் செல்போன் மூலமாக அஸ்கர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சிறப்பு ஆய்வாளர் ராமராஜ் தலைமையிலான போலீஸார், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு சாலையில் அந்த காரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும், காரில் இருந்த 6 பேர் தப்பியோட முயற்சித்தபோது 5 பேரை போலீஸார் பிடித்து, காரில் சோதனையிட்டனர். அப்போது காரில், 70 பொட்டலங்களில் 140 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அவர்களை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள உத்தம பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் பாலா (28), தெய்வம் மகன் மதன் (29), மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அஜித் (27), பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயமுருகன் மகன் பிரதீபன் என்கிற வெள்ளையன் (27), மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் மனோஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 140 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட 5 பேரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய மாரியப்பனை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்

Comments are closed.