திருச்சியில் வீட்டின் பூட்டுகளை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் ரங்கராஜ் (60). இவர் அப்பகுதியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி (56). காந்தளூர் ஊராட்சி இலந்தைப்பட்டி கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மே 14 ஆம் தேதி, ராஜலட்சுமி கேரளாவிற்கு சுற்றுலா சென்று விட்டார். ரெங்கராஜ் மட்டுமே வீட்டில் வசித்து வந்தார். வீட்டை பூட்டிவிட்டு தண்ணீர் தொட்டி மோட்டாரை ஆன் செய்ய சென்றவர் அங்கேயே தங்கி விட்டார். காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்தபோது, படுக்கை அறையில் இருந்த மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு, அவற்றில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் வரை சென்று நின்றுவிட்டது. இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரமும் இதேபோல துவாக்குடி காவல் நிலைய பகுதியில், நிலா முத்துப்பட்டி கிராமத்தில் 30 பவுன் நகையும் ரொக்கமும் திருடு போனது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த காவல் நிலைய பகுதிகளில் திருட்டு நடந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.