கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு…!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், இவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் முருகன், மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Comments are closed.