திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. அதன்படி இன்று ( 14.08.2023 ) குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த நாளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மனுக்கள் கொடுக்க வரும் பொது மக்களை போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே மனு அளிக்க உள்ளே அனுமதிக்கின்றனர். அதேபோல இந்த வாரமும் நுழைவாயில் பகுதியில் போலீசார் நின்று மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் கார் நிறுத்தப்படும் பகுதியில் நின்று கொண்டு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 பேரையும் தீக்குளிக்க விடாமல் தடுத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65), அவரது மகள் மாலதி( 40 ), பேத்தி ஹரிப்பிரியா( 8 )என்பது தெரியவந்தது. இவர்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.