Rock Fort Times
Online News

மரணமடைந்த திருச்சி சிபிசிஐடி இன்ஸ்பெக்டருக்கு  தமிழக அரசின் சிறப்பு  பதக்கம்  அறிவிப்பு…

திருச்சியில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவா் சிவா. கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் . இவர் கடந்த 10. 04. 2023 அன்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பணி காலத்தின் போது மிகச்சிறப்பாக பணியாற்றியதை கருத்தில் கொண்டும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் வகையிலும், இவருக்கு  சிறந்த பொதுச்சேவைக்கான  தமிழக முதலமைச்சாின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் கே.சிவா, எவ்வித ஏற்றதாழ்வுமின்றி அனைவரிடமும் யதார்த்தமாக பழகும் பண்பு கொண்டவர். காசு, பணம், லஞ்சம், ஆடம்பரம் என எதற்கும் ஆசைப்படாதவர். ” 1999-ம் ஆண்டு தமிழக காவல்துறை எஸ்.ஐ பணிக்கு மொத்தம் 422 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல்நிலை தேர்ச்சிப்பெற்ற 282 பேர் சட்டம்-ஒழுங்கு எஸ்.ஐ.யாக பணியமர்த்தப்பட்டனர். அதில் 12-வது ரேங்கில் தேர்வானவர்தான் இன்ஸ்பெக்டர் கே.சிவா. அந்தளவுக்கு திறமைசாலி. எப்பவுமே ஆக்டிவாகவே இருப்பார். உடன் பழகியவர்கள் யாரையும், எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். எவரை பற்றியும் புறம் பேசமாட்டார். இதன் மூலம், காவல்துறை வட்டாரத்தில் நல்ல பெயர் பெற்றவர். இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் புகழுக்கு மேலும் பெருமைசேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மரணமடைந்த இன்ஸ்பெக்டர் கே.சிவாவுக்கு பரமேஸ்வரி என்கிற மனைவியும், பி.டெக் இரண்டாம் ஆண்டு பயிலும் சஞ்சய் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வருண்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் இன்ஸ்பெக்டர் கே.சிவாவின் மாமனார் பெரியசாமி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றிய திமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் சேர்த்து, மேலும் 14 காவல்துறை அதிகாாிகளுக்கு  தமிழ்நாடு அரசின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கங்கள் நாளை ( 15.08.2023 ) சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.  விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா  8 கிராம்  எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25,000 ரூபாய் ரொக்க பாிசும் வழங்கப்படுகிறது.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்